இந்தியா

‘கொக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் முடக்கம் – தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) சாதகமாக வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஸ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், தேர்தல் சீர்திருத்தங்களை கோரியும் ‘கொக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, டெல்லியில் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, வீதிகள் அனைத்தும் வீதித்தடைகளால் மூடி முடக்கப்பட்டுள்ளன.

டெல்லி நகரம் தற்போது முழுமையாக முற்றுகையிடப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தலைநகர் டெல்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டதுடன், இணையதளச் சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

நகரின் நுழைவுப் பகுதிகளில் வாகனங்கள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை மாலை முதல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

மும்பையிலிருந்து டெல்லி வந்திறங்கிய கொக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் தலைவர் அபிஜீத் தீப்கே மற்றும் சிரேஷ்ட தலைவர்களை விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மற்றும் அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் (South Avenue) மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீதியில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி உட்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களையும் டெல்லி பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

 

கடந்த மே மாதம், இந்தியாவின் பிரதம நீதியரசர் சூர்யா காந்த் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” எனக் கேலி செய்து பேசியிருந்தார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நகைச்சுவையாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், அரச பரீட்சை வினாத்தாள் கசிவு மற்றும் அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு எதிரான இளைஞர்களின் கொந்தளிப்பால் இன்று பெரும் அரசியல் அலையாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இவர்களின் பிரம்மாண்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, இந்தியாவின் கல்வி அமைச்சர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *