53 தமிழ்க் கைதிகள் படுகொலை; உடனடி நடவடிக்கை கோரி கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. வலியுறுத்தல்

தமிழர்களுக்கு எதிரான 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலைக்கான உண்மையான நீதியைக் கண்டறியும் பொறிமுறையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
அதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.10.2026) இடம்பெற்ற, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில், விசாரிக்க ஆணைக்குழு அமைக்கக் கோரும் செல்வம் அடைக்கலநாதனின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
53 தமிழ்க் கைதிகள் படுகொலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கறுப்பு ஜூலை என்பது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு துக்க நாளாகும். அன்றைய தினம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களும், அவர்களின் பொருளாதாரமும் அழிக்கப்பட்டன.

வெலிக்கடைச் சிறைக்குள் அரசின் அனுமதியுடன் 53 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாக உள்ளது. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும் பொறிமுறை எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கறுப்பு ஜுலை படுகொலை தொடர்பான விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
ஆயினும் இலங்கையில் உள்ளகப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்துள்ளமையால், நாங்கள் சர்வதேசப் பொறிமுறையையே எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார்.
![]()