இலங்கை

“ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றம் அரசமைப்பைமீறும் செயல்”

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள அவர், நாடு திரும்பிய கையோடு இவ்விவகாரம் தொடர்பில் சட்டப்பூர்வமான காரணங்கள் சகிதம் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளார்.

இந்நிலையில் ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்டு, கைதிக்குரிய ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் இருந்து வெளியிட்ட அறிக்கையை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஐதேக தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன வாசித்துக்காட்டினார்.

அதில் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது:

“பௌத்த துறவி ஒருவரின் துறவற ஆடையை அவர் சார்ந்த பௌத்த பீடமே அகற்ற முடியும்.

கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரியே மகாநாயக்க தேரர்கள் அன்று ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். மாறாக அவரைச் சிறையில் அடைக்கவோ அல்லது துறவற ஆடையை அகற்றுமாறோ மகாநாயக்க தேரர்கள் கோரவில்லை; அதற்கான தேவைப்பாடும் இருக்கவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய ஞானசார தேரர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட பிறகு, நீதி அமைச்சு மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகே என்ன செய்ய வேண்டும் என முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் பௌத்த மதமும் மத சுதந்திரமும் சவாலுக்குட்படுகின்றன. அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகள் மீறப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அப்போது மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையின் பிரகாரம் அன்று மன்னிப்பு வழங்கப்பட்டதென்றால், தற்போது அது ஏன் மாற்றப்படுகின்றது? இது மகாநாயக்க தேரர்கள் விடுத்திருந்த கோரிக்கையாகும்.

நாடாளுமன்றத்துடன் கலந்துரையாடி இப்பிரச்சினையை வேறு கோணத்தில் தீர்ப்பதற்குரிய வாய்ப்பும் இருந்தது,” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *