இலங்கை

சிறைகளிலுள்ள பிக்குகள் தொடர்பில் சட்டத் திருத்தம்; மகா சங்கத்தினருடனான சந்திப்பில் ஜனாதிபதி

சிறைகளில் இருக்கும் மற்றும் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, புத்தசாசன அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆராய்ந்து தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவுக்கு ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் தொடர்பான விடயங்கள் குறித்து மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைந்து, கைதிக்கான சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் உட்பட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய சிறைச்சாலை அமைப்பானது 1877 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம், அமைச்சரினால் விதிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் பிறப்பிக்கப்படும் நிலையான கட்டளைகளின் கீழ் நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சட்டங்கள் பொதுவான கைதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பௌத்த பிக்குகள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் வரம்பிற்குட்பட்ட அளவிலேயே காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் பௌத்த தேரர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின் படியே சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட்டுள்ளதால் அவர்களைக் குறை கூறுவதில் பலனில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள சட்டம் தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாக இருந்தால், தனிநபர்களுக்கு ஏற்ப உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக, சரியான நடைமுறையின் கீழ் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய விதிமுறைகள் ஒரு குறிப்பிட்ட தேரரை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சிறையிலடைக்கப்படும் அனைத்து பௌத்த தேரர்களுக்கும் பொதுவானதாக அமையும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *