காவி உடை களைந்தது மகாநாயக்க தேரர்கள் கடுமையான ஆட்சேபம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைச் சிறைச்சாலை நிர்வாகம் சிவில் உடை அணிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை, ஒட்டுமொத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்கே சவால் என நாட்டின் மகாநாயக்க தேரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண. வரக்காகொட ஸ்ரீ ஞானரதன, இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க அதிவண. கரகொடை உயன்கொட மைத்திரி மூர்த்தி மற்றும் ஸ்ரீ ராமஞ்ஞ மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலாவே விமல ஆகிய மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்ற அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஒரு பிக்குவின் துறவறத்தை நீக்குவது சிறைச்சாலை நிர்வாகத்தின் அதிகாரமல்ல; அது சங்க சபைக்குரிய சாசன ரீதியான பணியாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பங்கம் வராத வகையில், ஞானசார தேரர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரது துறவறத்திற்கு (சீவரத்திற்கு) அவமரியாதை ஏற்படாதவாறு செயற்படவும், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது தொடர்ச்சியாகச் சீவரதாரியாகத் தோன்றுவதற்கான வசதிகளைச் செய்து தருமாறும் அம்மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கடிதத்தின் பிரதி நீதி அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
![]()