இலங்கை

ஞானசாரருக்கு காவி உடையை அணியுங்கள்; நீதிமன்றில் மனுத் தாக்கல்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரை பிக்குகளின் காவி உடையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் நேற்று வியாழக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு, காவி உடடைக்கு பதிலாக சிறைக்கைதிகளின் உடையே வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் ஏனை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது, கைதிக்கான உடையிலேயே அழைத்து வரப்படுகின்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் அவருக்கு மீண்டும் காவி உடையை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றன. அவர் காவி உடையை அகற்றும் அளவுக்கு குற்றங்களை புரியவில்லை என்றும், காவி உடை தொடர்பில் பௌத்த மகா சங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவி உடை நீக்கப்பட்டுள்ளமையால் ஞானசார தேரரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *