அனோஜனின் பாதுகாப்பு, விடுதலை தொடர்பாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் நேரில் சென்று வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனோஜனின் சகோதரருடன் சென்று நேற்று புதன்கிழமை நேரில் சந்தத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக,தமது தொடர்பாடல்கள் மூலம் சிவராசா அனோஜன் பற்றிய விடயங்களைக் கவனித்து தகவல்களை வெளியிட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அனோஜனின் சகோதரர் கடந்த சில நாட்களாக எனது வீட்டிலேயே தங்கியுள்ளார். தற்போது அனோஜனுக்குத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் வசதி சிறைச்சாலையில் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக எம்முடன் தொடர்புகொண்டு பேசிய அனோஜன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், தனது தலையில் ஆறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அழுதுகொண்டே தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதிசெய்வதே எமது முதன்மை நோக்கம். அதற்கான அனைத்து சட்டரீதியான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கூரிய ஆயுதத் தாக்குதலுக்குப் பின்னர், அனோஜனின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேல் அரசுக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பப்போவதில்லை.
அனோஜனின் விடுதலைக்கான கோரிக்கையை ஒரு சர்வதேச அளவிலான பிரசாரமாக முன்னெடுத்து, சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடுவோம்.அதன் ஒரு கட்டமாகவே நேற்று(புதன்) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனோஜனின் சகோதரருடன் சென்று நேரில் சந்தத்துப் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை தெளிவுபடுத்தினோம்.
2022ஆம் ஆண்டு 48 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பித்த எமது போராட்டம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டாக்டர் ஷாபிக்கு நீதி பெற்றுக்கொடுக்கப் போராடியதுடன், ருஸ்தியின் விடுதலைக்கும் உறுதுணையாக இருந்தேன். அன்று ருஸ்தியின் தாயாருக்கு அளித்த வாக்குறுதிக்கமைய செயற்பட்டு, அவரது விடுதலை தொடர்பான தகவல்களை வெளியிட்டேன். அதேபோன்றுதான் அனோஜனின் விடுதலைக்கான போராட்டமும் அமையும்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறேன். அந்தவகையில், நான் ‘ஜேஜே’ (மூத்த சகோதரர்) என அன்போடு அழைக்கும் உமர் ஹத்தாப் என்பவரின் விடுதலைக்காகவும் உழைத்து வருகிறேன்.
இன்று இலங்கையில் நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் பல உள்ளன. எனினும், சிலரின் பொறுப்பற்ற செயல்களால் இவ்வாறான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய விடயங்களை விடவும் இதற்கு அதிக கவனம் குவியவது சில சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளது.
அத்துடன், நான் மிகுந்த சகோதரத்துவத்துடன் பழகிவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர், என்னை பற்றி மிக மோசமாகப் பேசி வருவது உண்மையிலேயே மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.
இவ்விடயத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் நிற்க வேண்டும். நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு அர்த்தமற்ற விவாதங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்தது.
நான் கூறிய மற்றும் எழுதிய அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மையானவை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இவை அனைத்தையும் இன்றைய சந்திப்பில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
![]()