இலங்கைக் கடல் எல்லையில் ஈரான் கப்பல்கள் எதுவுமில்லை

இலங்கை கடல் எல்லையில் ஈரானிய கப்பல்கள் எதுவும் கிடையாது. இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல்பரப்பிலேயே அந்தக் கப்பல்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும் ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் அமெரிக்கா கூறியுள்ள விடயங்கள் தொடர்பாக நாம் கவனமாக இருப்பதே நல்லது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கு அருகில் 20 ஈரான் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பிலும், அந்த கப்பல்களில் இருப்பவர்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகிக்க கூடாது என்று இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தக் கப்பல்கள் எமது கடல் எல்லையில் இல்லை. சர்வதேச கடலில் இதுபோன்ற கப்பல்கள் உள்ளன. தற்போது யுத்த நிலைமையில் இதுபோன்ற கப்பல்கள் எல்லா பக்கத்திலும் இருக்கலாம். எமக்கென குறிப்பிட்டு அமெரிக்கா அறிக்கையை வெளியிடவில்லை. அமெரிக்காவும் யுத்தத்தில் ஒருதரப்பை பிரதிநிதித்துவம் செய்வதால் இதுபோன்ற தடைகள் விதிக்கப்படலாம். எவ்வாறாயினும் நாங்கள் எமது நாடு தொடர்பில் சிந்தித்தே செயற்பட வேண்டும். நாங்கள் எவருக்கும் பக்கச்சார்பாக இன்றி மனிதாபிமான ரீதியில் எந்த தரப்பாக இருந்தால் அவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையிலேயே எமது அரசாங்கமும் ஜனாதிபதியும் நடந்துகொள்கின்றோம்.
அமெரிக்கா குறிப்பிட்டுள்ள தடைகள் எமக்கென கூறியதல்ல. உலகில் எல்லா நாடுகளுக்கும் இவ்வாறு கூறியுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் இந்த விடயத்தில் கவனமாக இருப்பதும் நல்லதே. மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாடு தொடர்பிலும் சிந்தித்தே எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றார்.
![]()