பலதும் பத்தும்

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பிரபஞ்சத்தின் தீவிர நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்ததற்கும், அண்டார்டிகாவில் ‘ஐஸ்கியூப்’ (IceCube) நியூட்ரினோ ஆய்வகத்தை உருவாக்க முக்கிய பங்காற்றியதற்கும் பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மின்சுமையற்ற நியூட்ரினோக்கள் பருப்பொருட்களுடன் அரிதாகவே வினைபுரிகின்றன. இதனால் காந்தப்புலங்களால் திசைமாறாமல், பிரபஞ்சத்தில் பல நூறு கோடி கிலோமீட்டர்கள் நேர்கோட்டில் பயணித்து, தாங்கள் உருவான இடத்தைப் பற்றிய தகவல்களை நேரடியாகக் கொண்டுவருகின்றன.

தெந்துருவப் பனிப்பரப்பையே துகள் கண்டறியும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்ற ஹால்சனின் 1988-ஆம் ஆண்டைய யோசனைப்படி, 2011-இல் அண்டார்டிக் பனியின் ஆழத்தில் ஆயிரக்கணக்கான ஒளி உணரிகளுடன் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது.

பனிக்கட்டிக்குள் நியூட்ரினோக்கள் மோதும்போது உருவாகும் நுண்ணிய ஒளிக்கீற்றுகளைக் கொண்டு, அவை நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருந்து வருவதைக் கண்டறிந்தனர். இது ‘நியூட்ரினோ வானியல்’ (Neutrino Astronomy) எனும் புதிய துறைக்கு வழிவகுத்தது.

ஒளியைப் பயன்படுத்தாமல் துகள்களைக் கொண்டு பிரபஞ்சத்தைக் காணும் புதிய வழியைக் கண்டறிந்ததற்காக இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒளி மரபியல் (Optogenetics) துறையில் சாதனை படைத்த கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகேமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *