உலகம்

கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பயணத்தை தொடரும் மைத்ரேயி தமிழர்களுக்கு ஊக்கமளிக்கிறார்

பொதுவெளியில் ஏற்படும் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் துணிச்சலுடன் தனது பயணத்தைத் தொடரும் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன், பல தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட ஹொலிவுட் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன் அவரது அடையாளம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், மைத்ரேயி இராமகிருஷ்ணனின் அடைவு குறித்து கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் மற்றும் கலைஞர்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி உலக அரங்கில் முன்னேற்றம் அடைவதைக் காண்பது பெருமைக்குரிய விடயமாகும் என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் ஏற்படும் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் துணிச்சலுடன் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன் அவரது பயணத்தைத் தொடர்வதாகவும் ஜுவனிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழர்களின் வரலாறு, அனுபவங்கள் மற்றும் அடையாளம் தொடர்பான விடயங்கள் மிகவும் ஆழமானதும் தனிப்பட்டதும் ஆகும். பொதுவெளியில் இடம்பெறும் விவாதங்களில் ஒரு கலைஞரின் மனித உணர்வுகளும் அனுபவங்களும் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகலாம்’ என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

மேலும் மைத்ரேயி இராமகிருஷ்ணனின் மனவுறுதி, வலுவான குரல் மற்றும் பொதுவெளியில் தொடரும் இருப்பு என்பன பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ஜுவனிதா அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *