ரியாத்தில் அராம்கோ ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் அறிவிப்பு

யேமனின் ஈரானிய ஆதரவு ஹூதிகள், சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் அராம்கோ (Aramco) ஆலை ஒன்றை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
யேமனின் சனா (Sanaa) மற்றும் பிற மாகாணங்கள் மீது சவூதி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சனிக்கிழமை அதிகாலை ரியாத்தில் உள்ள அராம்கோ ஆலையின் அருகே பெரும் புகையும் தீப்பிளம்பும் எழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அராம்கோ ஆலை மீதான இத்தாக்குதல் குறித்து சவூதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்தவொரு உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. கருத்துத் தெரிவிக்குமாறு கோரப்பட்ட கோரிக்கைக்கு அராம்கோ நிறுவனமும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
சவூதி நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஹூதிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சவூதி அரேபியாவிற்கும் ஹூதிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலிலேயே இந்தத் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
யான்புவில் (Yanbu) உள்ள சவூதி அராம்கோ ஆலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த வாரம் ஹூதிகள் தெரிவித்திருந்தனர்.
தாயிஃப் (Taif) மற்றும் யான்பு பகுதியை நோக்கி ஹூதிகளால் ஏவப்பட்ட ஆறு பெலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் இடைமறித்து அழித்ததாகச் சவூதி அரேபியா அக்காலப்பகுதியில் தெரிவித்திருந்தது. இருப்பினும், அராம்கோ ஆலைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்பட்டதாக அது அறிவிக்கவில்லை.
![]()