பலதும் பத்தும்

“இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” – ஈலோன் மஸ்க் பேச்சு மீண்டும் சர்ச்சை

உலகின் பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான ஈலோன் மஸ்க், சமூக வலைத்தளமான X தளத்தில் பதிவொன்றுக்கு பதிலளிக்கும் போது, இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான ஒரு செயலி எனக் குறிப்பிட்டிருப்பது இணையத்தில் மீண்டும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் எவ்வித பயனும் இல்லை என்றும், அது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான தளம் என்றும் கூறி அத்தளத்திலிருந்து வெளியேறுவதாகப் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மஸ்க் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மாஸ்க் சொந்தமாக X தளத்தை வைத்திருப்பதால், போட்டி சமூக ஊடகமான மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமை விமர்சிப்பது வணிக ரீதியான ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

X மட்டுமே திறந்த விவாதங்களுக்கான ஒரே தளமாகச் செயல்படுகிறது என்றும் அவர் வாதிடுகிறார்.

கடந்த மே மாதம் இவ்வாறான விமர்சனத்தை முன்வைத்த போது, ஆண்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன், பாலின மாற்றம் மற்றும் ‘Woke’ கலாசாரத்துக்கு எதிராக அவர் கொண்டுள்ள தீவிர நிலைப்பாடும், அவரது திருநங்கை மகளான விவியன் ஜென்னா வில்சனுடனான முறிந்த உறவும் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இருப்பினும், மஸ்க்கின் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Statista வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகளாவிய அளவில் இன்ஸ்டாகிராம் பயனர்களில் 50.6 சதவீதம் ஆண்களும், 49.4 சதவீதம் பெண்களும் உள்ளனர். அதேவேளை, அமெரிக்காவில் மட்டும் 55.2 சதவீதம் பெண்களும் 44.8 சதவீதம் ஆண்களும் பயனர்களாக உள்ளனர்.

எனவே, இது இன்ஸ்டாகிராம் பயனர்களைத் தூண்டும் வகையிலும், X தளத்தை முதன்மைப்படுத்தும் நோக்கிலும் மஸ்க் மேற்கொண்ட வழக்கமான ஒரு சர்ச்சை கருத்துப் பதிவே என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *