உலகம்

ஈரானின் முன்மொழிவுக்கு பதிலளித்தது அமெரிக்கா: அடுத்து என்ன?

ஈரான் முன்மொழிந்த ஏழு நாள் நம்பிக்கை கட்டமைப்புத் திட்டம் குறித்தான அமெரிக்காவின் பதிலை, கத்தார் மத்தியஸ்தர்கள் மூலமாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பெற்றுக்கொண்டுள்ளார்.

“திட்டத்தின் உள்ளடக்கங்களை விட, அதன் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் வரிசை முறையிலேயே (Sequencing) கருத்து வேறுபாடு நிலவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை குறித்து அறிந்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி,

செப்டம்பர் 29, செவ்வாய் மாலை தோஹாவில் கத்தார் மத்தியஸ்தர்களை Abbas Araghchi சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் வழியில் Abbas Araghchi மற்றும் அவரது குழுவைச் சந்தித்த கத்தார் மத்தியஸ்தர்கள், திங்களன்று வாஷிங்டனிடமிருந்து பெறப்பட்ட பதிலை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த பதில் குறித்து புதனன்று தெஹ்ரானில் உத்தியோகபூர்வமாக மதிப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த அதிகாரியின் கூற்றுப்படி, ஏழு நாள் நம்பிக்கை கட்டமைப்பு அமைப்பை நடைமுறைப்படுத்தும் வரிசைமுறை மற்றும் காலக்கெடு குறித்தே தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே முக்கியக் கருத்து வேறுபாடு உள்ளது.

இருப்பினும், திட்டத்தின் முக்கியக் கூறுகளுக்கு இரு தரப்பிலிருந்தும் அடிப்படை எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

“நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதையும், ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்புவதையும் இந்த முன்மொழிவு நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வரைவுத் திட்டம் இஸ்லாமியக் குடியரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த வாரம், தெஹ்ரானின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால், முதல் நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஆறாவது நாளில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படும் என்றும், ஏழாவது நாளில் அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் ஈரான் முன்மொழிந்தது.

இந்த முன்மொழிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் இந்த சலுகையை நிராகரித்தார்.

இருப்பினும், கத்தார் தொடர்ந்து தூதரக ரீதியிலான தூதுப் பணிகளை மேற்கொண்டு, இரு தரப்பிற்கும் இடையிலான எஞ்சிய இடைவெளிகளைக் குறைப்பதற்கான கூடுதல் யோசனைகளை முன்வைத்து மத்தியஸ்தம் செய்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *