உலகம்

ஜெர்மனியின் உளவுத் தகவல்கள் ரஷ்யாவின் கைகளுக்குள் செல்லும் அபாயம்

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து, ரஷ்யா அல்லது குற்றக் கும்பல்களுக்கு ரகசியத் தகவல்கள் கசியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அமைப்புகளின் ரகசியத் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்டில் (Saxony-Anhalt) கிட்டத்தட்ட முழுப் பெரும்பான்மையைப் பெறவிருந்த தீவிர வலதுசாரி ‘அல்டர்னேட்டிவ் பார் ஜெர்மனி’ (AfD) கட்சியினாலும், செப்டம்பர் 20 ஆம் திகதி தலைநகர் பெர்லினில் முதலிடத்தைப் பிடித்த தீவிர இடதுசாரிக் கட்சியினாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என ஆளும் கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெர்மனியின் கூட்டாட்சி முறையின் கீழ், மாநிலங்கள் தங்கள் சொந்த உள்நாட்டு உளவுத்துறை அமைப்புகளை உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இவை தங்களுக்குள் தகவல்களைப் பகிர்வதுடன், கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்துடனும் (BfV) இணைந்து செயல்படுகின்றன.

இந்நிலையில், தீவிர வலதுசாரி அல்லது தீவிர இடதுசாரி அமைச்சர்களின் அதிகாரத்தின் கீழ் இந்த உளவு அமைப்புகள் சென்றால், ரகசியத் தகவல்கள் மாஸ்கோவிற்கோ (ரஷ்யா) அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் குழுக்களுக்கோ கசியக்கூடும் எனப் போட்டியாளர்க் கட்சிகளின் அரசியல்வாதிகளும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கன்சர்வேடிவ் கூட்டணியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஹாப்மேன் கருத்துத் தெரிவிக்கையில், “பெர்லினைப் பொறுத்தவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் தொடர்பான தகவல்கள் கசியும் அபாயம் உள்ளது. அதேபோல சாக்சனி-அன்ஹால்டில் ரஷ்யா தொடர்பான ரகசியத் தகவல்கள் கசியக்கூடும்” எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கூட்டணி வைத்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை AfD கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தாங்கள் போரைத் தவிர்க்கவே விரும்புவதாகவும், உக்ரைனுக்கு ஜெர்மனி ராணுவ உதவி வழங்குவதை எதிர்ப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் மத்தியில் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே அரசாங்கம் இவ்வாறான வீண் வதந்திகளைப் பரப்புவதாகக் குறிப்பிட்ட AfD கட்சியின் பேச்சாளர், பல ஆண்டுகளாக இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்குரிய எந்தவொரு ஆதாரத்தையும் எதிர்த்தரப்பினரால் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெர்லினில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தீவிர இடதுசாரிக் கட்சியும் வன்மையாக மறுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *