பலதும் பத்தும்

ரோபோ தாக்கி உயிரிழந்த இளைஞர்

தென்கொரியாவில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரோபோ இயந்திரம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்வத்தின் மகன் சுதர்சன் (33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்கொரியாவின் சியோரா நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொழிற்சாலையில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த சுதர்சனை, அங்கு இயங்கி வந்த ரோபோ இயந்திரம் எதிர்பாராதவிதமாக அவரது மார்புப் பகுதியில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுதர்சனுக்கு கடந்த வாரம்தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

திருமண வாழ்க்கையைத் தொடங்கும் எதிர்பார்ப்பில் குடும்பத்தினர் இருந்த நிலையில், எதிர்பாராத தொழிற்சாலை விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் சொந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதர்சனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், தென்கொரியாவில் உள்ள தமிழ் சங்கத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *