சிங்கப்பூரில் ஷிரந்தி திடீர் தலைமறைவு; நேற்று விசாரணைக்கு வரவில்லை

சிங்கப்பூரில் சிகிச்சைக்காக செல்வதாக கூறி அவசரமாக சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இதுவரை நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையாவதாக அறிவித்திருந்த போதிலும், அவர் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தில் எவரும் பயந்து ஓடமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் ஷிரந்தி ராஜபக்ச திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றதுடன், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமுக்கு தப்பியோடி மறைந்திருந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்கள் மீண்டும் நினைவு கூர்ந்து வருகின்றன.
நாமல் ராஜபக்சவின் கூற்றின் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் தப்பியோடிய வரலாற்றை மறைக்க முயன்றாலும், ஷிரந்தி ராஜபக்ச இதுவரை திரும்பி வராத காரணத்தினால் ராஜபக்சர்களின் தப்பியோட்டம் பற்றிய விவாதம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
அத்துடன், பசில் ராஜபக்ச, ஷமிந்திர ராஜபக்ச, ஜாலிய விக்ரமசிங்க ஆகியோரும் தற்போது நாட்டிலிருந்து தப்பியோடி மறைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()