இலங்கை

முள்ளிவாய்க்கால் வழிகாட்டியை அகற்றியது போல் அனுமதியற்ற போர் வெற்றிச் சின்னத்தை அகற்ற முடியுமா?; பொலிசாருக்கு ரவிகரன் எம்.பி. சவால்!

முள்ளிவாய்க்கால் நினைவிட வழிகாட்டித் தளத்தை அகற்றிய பொலிஸாருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், முள்ளிவாய்க்கால் மேற்கு சந்தியில் நிருமாணிக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட தளத்தையும், புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அனுமதியற்று நிருமாணிக்கப்பட்ட போர் வெற்றிச் சின்னத்தையும் ஏன்?அகற்றமுடியவில்லை எனக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட எம்.பி.துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான வழிகாட்டித் தளத்தை அழித்தவர்களால் உயிரோடும் உதிரத்தோடும் கலந்துள்ள எங்கள் உணர்வுகளை ஒருபோதும் அழிக்கமுடியாதெனவும் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சிவப்பு மஞ்சள் தீந்தை பூசி முள்ளிவாய்க்கால் நினைவாலய வளாக வீதி என எழுதப்பட்ட சீமெந்துத்தளம் கடந்த 2026.09.14 அன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அடியோடு பிடுங்கி வீழ்த்தப்பட்டுள்ளது.

இத்தளத்தை இனங்காண முடிந்த பொலிசாருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் பல ஆண்டுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் சந்தியில் நிருமாணிக்கப்பட்ட இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட தளம் ஏன் இன்னமும் கண்ணுக்குத் தெரியவில்லை. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அனுமதியற்று நிருமாணிக்கப்பட்ட போர் வெற்றிச் சின்னம் ஏன் இன்னமும் கண்ணுக்குத் தெரியவில்லை?

உங்களுக்கு இருக்கும் பிரச்சினை, அந்த சீமெந்து தளமா அல்லது அந்தத் தளத்தில் உள்ள சிவப்பு மஞ்சள் வண்ணமும் அங்கு எழுதப்பட்ட எழுத்துகளுமா?

ஒரு நூறு புலனாய்வுப்பிரிவினர், படையினர், பொலிசார் சூழ்ந்திருக்க உயிரையும் துச்சமென எண்ணி உங்கள் அடக்குமுறையையும் மீறித்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் நாங்கள் நினைவேந்தத் தொடங்கினோம். உங்கள் அனுமதியைக் கேட்டல்ல!

பல விசாரணைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டியே தான் இறுதிப்போருக்குப் பின்னர் மாவீரர் நாளையும் நினைவேந்தினோம். உங்களிடம் கேட்டல்ல!

இப்போது பாருங்கள் இடித்து வீழ்த்தப்பட்டுள்ள அந்த நினைவேந்தல் வளாக வீதி பொறித்த சீமெந்துத் தளத்திலும் உங்களின் கோரமுகமே உலகுக்கு சாட்சியாகி நிற்கிறது!

சீருடையுடனான இரத்தம் தோய்ந்த மாணவனின் பொம்மை இரவோடு இரவாக களவாக அகற்றி மீதமிருந்த வழிகாட்டித் தளத்தையும் பெயருக்காக அகற்ற முடிந்த உங்களால் எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் கலந்துள்ள எங்கள் உணர்வு வழிகாட்டிகளை எதைக்கொண்டு அழிக்கப்போகிறீர்கள்!

தமிழர்களின் உணர்வுகளை, தமிழர் அபிலாசைகளை மிதித்து, அடக்கி, அழித்துவிட்டு இத்தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைப்பது சுத்த முட்டாள்தனம் என்பதை அரசும் அரச கட்டமைப்புகளும் உணரவேண்டும். முள்ளிவாய்க்கால் வழிகாட்டல் தளம் அடியோடு வீழ்த்தப்பட்டதை முள்ளிவாய்க்கால் மண்ணைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினராக வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *