அனோஜனின் விடுதலைக்கு உலமா சபை உதவ வேண்டும்; இந்து அமைப்புகள் கோரிக்கை

நபிகள் நாயகத்தை நிந்தனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு பொது மன்னிப்பு கிடைக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்களும் பிரதிநிதிகளும் இணைந்து நேற்று புதன்கிழமை மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
நபிகள் நாயகத்தை நிந்தனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு சவூதி அரசாங்கத்திடம் ஜம்இய்யாவின் சார்பில் கோரிக்கையொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தியே இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது வருகை தந்திருந்த குருமார்களும் இந்துப் பிரமுகர்களும், அனோஜனின் செயலுக்குத் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் முதற்கண் தெரிவித்துக் கொண்டதுடன், இவ்வாறான தவறான செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், அனோஜனின் அறியாமையால் நேர்ந்த இத்தவறை மன்னித்து அவரை விடுவிப்பதற்கு அல்லது தண்டனையைக் குறைப்பதற்குத் தேவையான முயற்சிகளைத்,தங்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் சகவாழ்வு, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. சமய அமைப்புகள் என்ற ரீதியில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி கைலாசபதி அபிராமி, சர்வதேச இந்து அமைப்பின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், ஐயப்ப குருசுவாமி அமைப்பின் தலைவர் ரவி குருசாமி, விஜயகுமார சுவாமி, குருமார் அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வர குருக்கள், பாணந்துறை சேவாலங்கார ஜெகன் குருக்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஸ்தாபகர் ராஜு பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட்டு அனோஜனின் விடுதலைக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்றும், அவர் இழைத்தது தவறு என்பதை இந்து சமூகம் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனவே, அவரது தண்டனையைக் குறைத்து அவரைக் காப்பாற்றுவதற்கு ஜம்இய்யத்துல் உலமா சபை உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடல் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலான ஒரு முக்கிய நகர்வாக அமைந்திருந்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் உப தலைவர், பொதுச் செயலாளர், உப செயலாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
![]()