இலங்கை

புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனுக்குச் சிலையா?; சபையில் சீறிய எம்.பி.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை எவரும் மறக்க கூடாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த வீரர்களை அவமதித்துக் கொண்டு வடக்கில் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனுக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறான எடுத்துக்காட்டு என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட எம்.பி. சானக மாதுகொட தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புலிகள் அமைப்பின் உறுப்பினரான பால்ராஜ் தேசிய தலைவர் என்று பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்.அவரது உரை இன்றுவரை பாராளுமன்ற ஹன்சாட் பதிப்பில் இருந்து நீக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி,சின்னம் மற்றும் அந்த அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது நினைவுபடுத்தும் எவ்வித செயற்பாடுகளிலும் சட்டத்துக்கு அமைய எவரும் செயற்பட முடியாது. ஆனால் வடக்கில் நல்லூர் கோவிலுக்கு அருகில் புலிகள் அமைப்பின் போராளியான திலீபனுக்கு உருவச்சிலை புனரமைக்கப்பட்டு, கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த வீரர்கள் இன்று அவமதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் வடக்கில் புலிகள் அமைப்பின் போராளிகள் கௌரவிக்கப்படுகின்றனர்.திலீபனின் உருவச்சிலை திறப்பு விழாவுக்கு பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் மத்திலும் பிரிவினைவாத சிந்தனை திட்டமிட்ட வகையில் விதைக்கப்படுகிறது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *