இலங்கை

நாமல் ராஜபக்‌ஷ 30 வரை விளக்கமறியலில்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை மீண்டும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாமல் ராஜபக்‌ஷவை தொடர்ந்தும் 30ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எயார்பஸ் கொள்வவின் போதான கொடுக்கல் வாங்கலின் போது, இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கில் நாமல் ராஜபக்‌ஷவை சந்தேகநபராக பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்ததுடன். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இத் தகவலை அறிக்கை செய்திருந்தது.

இதனை தொடர்ந்து நாமல் ராஜபக்‌ஷவை செப்டம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது விசாரணை நடத்தும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சார்பாக ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த வழக்கின் சந்தேக நபரான நாமல் ராஜபக்‌ஷவுக்கு பிணை வழங்குவதற்கு முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் நாட்டுக்கு வராமல் வெளிநாடுகளில் இருக்கின்றனர் என்றும், இந்நிலையில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு பிணை வழங்கினால் இது தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையலாம் என்றும் நீதிமன்றத்தில் விளக்கங்களை முன்வைத்தார்.

இதேவேளை நாமல் ராஜபக்‌ஷ சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் சிலர் ஆஜராகியதுடன், அவர்கள் நாமல் ராஜபக்‌ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் அங்கு முன்வைக்கப்பட்ட இருதரப்பு விளக்கங்களை ஆராய்ந்த நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபரான நாமல் ராஜபக்‌ஷவை நேற்று 23ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறும், அதன்போதுபிணை கோரிக்கை தொடர்பில் உத்தரவை வழங்குவதாகவும் நீதவான் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வேளையில் நாமல் ராஜபக்‌ஷவின் விளக்க மறியலை 30ஆம் திகதி வரையில் நீடிக்க உத்தரவிட்ட நீதவான், பிணை கோரிக்கை தொடர்பான விடயங்கள் சிலவற்றுக்கான விளக்கங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான இன்னுமொரு வழக்கில் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *