பலதும் பத்தும்

கனடா நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ‘பாம்ஃப் தேசியப் பூங்கா’ வழியே செல்லும் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் வாகன சாரதிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக ப்ராப்பல்லர் விமானம் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்த வேறு வழியின்றி, விமானி நெடுஞ்சாலையிலேயே விமானத்தைத் தரையிறக்கத் தீர்மானித்தார்.

கேஸில் ஜங்ஷன் அருகே உள்ள ‘ரெட் எர்த் வைல்டுலைஃப் ஓவர்பாஸ்’ பகுதிக்கு சற்று முன்பாக, நெடுஞ்சாலையின் வலது பக்க ஓரத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கிய அந்த குறிப்பிட்ட நொடியில், அதிர்ஷ்டவசமாக அந்தச் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.

மேலும் விமானம் எந்தவித சேதமுமின்றி பத்திரமாகத் தரையிறங்கியதாகவும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவுமில்லை என கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலை ஓரத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானியே சாலையோரத்திலேயே வைத்து பழுது பார்த்துள்ளார்.

இதற்காக ‘பார்க்ஸ் கனடா’ நிர்வாகம் மற்றும் கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்திடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டது.

பழுதுநீக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மாலை 4:40 மணியளவில் அதிகாரிகளின் அனுமதியோடு அதே நெடுஞ்சாலையிலிருந்து விமானம் மீண்டும் டேக்-ஆஃப் ஆகி, ஆல்பர்ட்டாவில் உள்ள ‘ரெட் டீயர்’ பகுதியை நோக்கிப் பறந்து சென்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *