உலகம்

இந்தோனேஷியாவில் காட்டுத்தீ மற்றும் நச்சுப் புகை; லட்சம் பேர் பாதிப்பு

இந்தோனேஷியாவின் சுமாத்திரா மற்றும் போர்னியோ தீவுகளில் வாரக்கணக்காகப் பரவி வரும் காட்டுத்தீ மற்றும் கடுமையான புகைமூட்டத்தினால் 1.75 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் எனவும், இவர்களுக்கு சாதாரண இருமல், மூச்சுக்குழாய் அழற்சி முதல் தீவிர நியூமோனியா வரையிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மாநகரப் பரப்பளவை விட ஆறு மடங்கு அதிகம்

 

எல் நினோ காரணமாக காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 8,95,657 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாகவும், இது லண்டன் மாநகரப் பரப்பளவை விட சுமார் ஆறு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயால் உருவாகியுள்ள நச்சுப் புகை இந்தோனேசியாவை மட்டுமன்றி, அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளது.

தீவிரமாகப் பாதிக்கப்பட்ட மேற்கு கலிமந்தன் பகுதியில் நச்சுப் புகையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில் அரிய வகை ஒராங்குட்டான் ஒன்று உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 54,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 64 ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் தற்காப்புப் படையினரின் உதவியுடன் மேக விதைப்பு நடவடிக்கைகள் மூலம் செயற்கை மழையை ஏற்படுத்தி காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் காட்டுத்தீ பேரழிவைத் தடுக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, பழங்குடியினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

புகைமூட்டம் காரணமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *