22-வது திருத்தம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று?

அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகரால் இன்று செவ்வாய்க்கிழமை பெரும்பாலும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு நேற்று திங்கட்கிழமை கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் நீதிமன்ற வியாக்கியானம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை சபாநாயகரின் அறிவித்தலின் பின்னர் இச்சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நீதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும் என்று உத்தரவிடுமாறு கோரி, அந்த சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன்படி 65க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவற்றின் விசாரணை பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்று கடந்த 2ஆம் திகதி மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியாணம் இரகசிய தீர்ப்பாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வியாக்கியானம் நேற்று சபாநாயகருக்கு கிடைத்துள்ள நிலையில் அவர் அது தொடர்பில் சபையில் அறிவிக்கவுள்ளார்.
![]()