இலங்கை

ஆட்சியை மாற்றிய மக்கள் போராட்டம் முறைமையை மாற்றவே நடத்தப்பட்டது!; அநுர அரசுக்கு மனோ நினைவூட்டல்

“மக்கள் போராட்டத்தின் பின்னர் உருவான அரசியல் சூழலைப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள், முறைமையை மாற்றுவோம் என்று கூறிவிட்டுத் தற்போது அதே முறைமையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருகின்றனர் என மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் போராட்டம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியினாலும் முன்னெடுக்கப்பட்டதல்ல. பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து அதனைச் செய்தனர். அந்த அரசியல் சூழல்தான் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கே கிடைத்தது. சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க அல்லது நாமல் ராஜபக்ஷவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மையே. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும், அந்தப் போராட்டம் வெறுமனே ஆட்சியில் இருப்பவர்களை மாற்றுவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக முறைமையில் ஆழமான மாற்றத்தை (முறைமை மாற்றம்) ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதையும், நாட்டின் பொருளாதாரச் சவால்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பின்னர் மக்களுக்கு உண்மைக்கு மாறான விடயங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊழல், வன்முறை, பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்.

ஜனாதிபதி நாட்டை நிர்வகிப்பதில் மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளார். அவரை மாதத்துக்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கு அழைத்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தேர்தல் காலத்திலும் மக்கள் சந்திப்புகளிலும் வெவ்வேறு இடங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து மீளாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் வெவ்வேறு அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடாமல், ஒரே நிலைப்பாட்டையும் ஒரே குரலையும் கொண்டிருக்க வேண்டும்.

மக்கள் இன்னும் இந்த அரசின் மீது எதிர்பார்ப்புகளை வைத்துள்ள போதிலும், மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் நடைமுறைச் செயற்பாடுகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் முறைமை மாற்றம் குறித்த மக்கள் நம்பிக்கை மேலும் கடுமையாகப் பாதிக்கப்படும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *