இலங்கை

ஜெனீவா அனுபவத்துக்குப் பின்னர் மிலிந்த ராஜபக்சவின் அதிரடி கருத்து ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

இலங்கைக்கு வெளியே இயங்கும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சர்வதேச அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.

ஜெனீவா விஜயத்தைத் தொடர்ந்து வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் தாம் பங்கேற்ற கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தங்களது கருத்துக்களை மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அனுபவத்துக்குப் பின்னர் மிலிந்த ராஜபக்சவின் அதிரடி கருத்து ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு | Milinda Remarks Following The Geneva Experience

குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தினர் நீண்டகாலமாக தங்களது நாடுகளில் அரசியல் ரீதியான செல்வாக்கை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தங்களது பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மிலிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தங்களது தரப்பு தற்போது பின்தங்கியுள்ளதாகவும், சர்வதேச அரங்கில் தங்களது கருத்துக்களை திறம்பட முன்வைக்கக்கூடிய திறமையான இளைஞர்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற, சர்வதேச அளவில் கருத்துக்களை முன்வைக்கும் திறன் கொண்ட இளைஞர்களை உருவாக்குவதற்கு நீண்டகால திட்டமிடல் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், புலம்பெயர் சமூகத்தின் அரசியல் செயற்பாடுகளை எதிர்கொள்வது தொடர்பில் தனியான கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்வைத்ததாகவும் அவரது பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சர்வதேச அரசியல் செல்வாக்கு தொடர்பில் மிலிந்த ராஜபக்ச வெளிப்படையாக தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *