உலகம்

இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்!

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.

தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (19) வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து வருகிற 20 ஆம் திகதி பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் வருகிற 25 ஆம் திகதியும், அடுத்த மாதம் 2 ஆம் திகதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை வீதியில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தான் தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *