சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர்- 14….. சங்கர சுப்பிரமணியன்


ஷிபுயா கிராஸிங்குக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ஷிபியா ஸ்கிராம்பிள் என்ற பெயர்தான்.ஷிபியா கிராஸிங்கின் பிரமிப்பை பார்வையிட்ட பின் ஷிபியா ஸ்கை சென்றோம். ஷிபியா ஸ்கை என்பது அங்கிருந்து நடக்கும் தூரத்தில் உள்ள வானுயர்ந்த கட்டிடம். அதன் கடைசி மேல்தளத்தில் உள்ள திறந்த வெளியாகும்.
இந்த இடத்திலிருந்து டோக்கியோ நகரம் முழுவதையும் எல்லா கோணங்களிலும் இருந்து பார்க்கலாம். இதேபோல் டோக்கியோ டவர் என்ற வானுயர்ந்த கட்டடத்தில் இருந்தும் டோக்கியோ நகரம் முழுவதையும் காணலாம். ஆனால் இந்த இடத்தின் சிறப்பு இங்கிருந்து கீழேயுள்ள ஷிபுயா கிராஸிங்கை பார்க்கும்போது ஒரு பதிய அனுபவத்தைப் பெறலாம்.
இக்கட்டிடம் தரைமட்டத்தில் இருந்து 229 மீட்டர் உயரம் உள்ளது. 46 தளங்களுடன் கூடிய இக்கட்டிடத்தில் 14வது தளம் வரை லிப்டில் செல்லலாம். அங்கிருந்து 45, 46வது தளம் செல்ல வேண்டுமானால் அனுமதிச் சீட்டு வேண்டும். அனுமதிச் சீட்டை நாங்கள் முன்பதிவு செய்திருந்ததால் நீண்டவரிசையில் நிற்கத் தேவையில்லாதிருந்தது. வரிசையில் நின்றாலும் பெருபாலும் அனுமதிச் சீட்டு கிடைக்காது.
ஒருவேளை முன்பதிவும் கிடைக்காமல் வரிசையில் நின்றும் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடவேண்டியதில்லை. ஐந்துநிமிட நடை தூரத்தில் மாகனட் பை ஷிபுயா109 என்ற இன்னொரு பார்வயிடும் தளமும் உள்ளது. இங்கு அனுமதிச் சீட்டு வாங்கவேண்டும். பெரும்பாலும் அனுமதிச்சீட்டு கிடைத்துவிடும். ஆனால் ஷிபுயா ஸ்கைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
காரணத்தைச் சொல்கிறேன். ஷிபுயா ஸ்கையின் 46வது திறந்தவெளி மாடியில் இருந்து ஷிபுயா கிராஸிங், டோக்யோ டவர், டோக்யோ ஸ்கைட்ரீ மற்றும் மவுண்ட் ப்யூஜி போன்றவற்றை தடைபடாது பார்க்குமளவுக்கும் பாதுகாப்பு கருதியும் கண்ணாடிச்சுவர்கள். 45வது மாடியில் இருந்தும் பார்க்கலாம். காலை பத்து மணியில் இருந்தி இரவு பத்து மணிவரை திறந்திருக்கும்.
46வது மாடியில் ஒரு இடத்தில் மேற்கூரையுடன் ஒரு உணவகம் உள்ளது. இங்கு இலேசான சிற்றுண்டி மற்றும் பானங்கள் கிடைக்கின்றன. இரவு நேரத்தில் ஷிபுயா ஸ்கை சென்றால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தெரியும். அங்கிருந்து அடித்தளத்தின் வழியாக ஷிபுயா ரயில் நிலையத்திற்கு நேரடியாகவே சென்று விடலாம்.
இரவாகி விட்டதாலும் மறுநாள் அதிகாலை எழுந்திருக்க வேண்டியிருந்ததாலும் அங்கிருந்து புறப்பட்டோம். என்னதான் வரைபட உதவியுடன் தக்க செயல் திட்டங்களோடு சென்றாலும் ஒரு இடத்தை தவறாவிட்டால் அவ்வளவுதான். எப்படி தவறவிட்ட வழியை கண்டுபிடிப்பது என்பது கடினமாகவே இருந்தது. வழிகேட்க வேண்டுமானால் மொழிப் பிரச்சினையால் செயலியைத்தான் பயன் படுத்தவேண்டும்.
அடுத்ததாக ஒரு சிக்கல். ஜப்பானியர்கள் உதவிசெய்தாலும் முழுமையாக அவர்களை நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் அவர்களின் சுறுசுறுப்பும் வேகமும்தான். இரவு பகல் என்று பாராமல் ஒரு ரோபோ போல் சாவி கொடுத்த பொம்மை மாதிரி இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஜப்பானில் இருந்தவரை யாரையும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையோ சோம்பேறியாக இருப்பதையோ நான் பார்த்ததில்லை. அவர்களது முன்னேற்றத்தின் காரணம் புரிந்தது.
ஆதலால் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்து வாடகை
வாகனங்களையே பயன்படுத்தினோம். இப்படியாக டோக்கியோவில் முதல்நாள் முடிந்தது. அடுத்ததாக ஷின்ஜிகு ஹோயன் தேசிய பூங்கா என்ற இடத்திற்கு போக முடிவு செய்தோம். இந்த பூங்காவில் ஜெர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதை உறுதி செய்துகொண்டோம். இங்கு செல்ல வேண்டுமென்றே வம்பை விலைக்கு வாங்கினோம்.
வம்பு வேறொன்றுமில்லை. வாடகை வாகனத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வம்பு. வம்புக்கு காரணம் ஷின்ஜிகு ரயில் நிலையத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்தான். ரயில் நிலையத்தைப் பார்ப்பதில் என்ன ஆவல் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ரயில் நிலையம் என்பதை பதிவு இங்கு பதிவு செய்கிறேன்.
ஒரு முறைக்கு பலமுறை வரைப்படத்தை பார்த்து மனதில் பதிவு செய்துகொண்டேன். ஓட்டலில் இருந்து குறிப்பிட்ட ரயில் நிலையத்தை எப்படி சென்றடைய வேண்டும் என்ற வழியையும் குறித்துக் கொண்டேன். பயணத்தைத் தொடர்ந்தேன். போகும் ஷின்ஜுகு ரயில்நிலையத்தைப் பற்றி சொன்னால்தான் அதன் சிறப்பு உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு சற்று விபரமாகச் சொல்லி விடுகிறேன்.
நான் மெல்பனில் இருப்பதால் மெல்பனை சான்றாக எடுத்துக் கொள்வோம். மெல்பனில் பெரிய நிலையங்களாக ப்ளிண்டர் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்தர்ன் கிராஸ் என்று இரண்டு பெரிய ரயில் நிலையங்கள்உள்ளன. அதில் ப்ளிண்டர் ஸ்ட்ரீட்டில் ஆறு வெளியேறும் இடங்களும் ஸதர்ன் கிராஸில் நான்கு வெளியேறும் இடங்களும் உள்ளன். ஆனால் ஷினுஜுகு ரயில்நிலையத்தில் 240 வெளியேறும் இடங்கள் உள்ளன. இந்த பிரமிப்பின் அதிசயம் என்ன தெரியுமா?
கூகுளே குழம்பி நிற்கும் அளவுக்கு அது இருநூறுக்கும் மேற்பட்ட எக்ஸிட் இருப்பதாகத்தான் சொல்கிறது. காஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதலடையும் அந்த நதியே காஞ்சுபோயிட்டா என்ற தங்கப்பதக்கம் படத்தில் வரும் சோதனைமேல் சோதனை என்ற பாடலில் வரும் வரிகள்தான் ஞாபகத்தில் வருகிறது. சந்தேகம் வரும்போது கூகுள்தான் கைகொடுக்கிறது. அந்த கூகுளே கையொடிந்து நின்றால்?

ஆதலால் அந்த ரயில் நிலையத்தை அடைந்ததும் குறித்து வைத்திருந்த குறிப்பிட்ட வெளியேறும் இடத்தில் வெளியேறினோமா என்று இருக்கவேண்டும். அதைவிட்டு எண்ணிப் பார்ப்போம் என்று இறங்கினால் காதல் படத்தில் வரும் காட்சியில் நடிகர் பரத்துக்கு ஏற்பட்ட நிலையே நமக்கும் ஏற்படும். வேறு வேலை இல்லாவிட்டால் எண்ணிக் கொண்டிருக்கலாம். எவ்எளவை நேரம் ஆகும்? எண்ண முடியுமா? என்பதை எல்லாம் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.
இப்போது நான் ஓட்டலில் இருந்து ஷின்ஜுகு ரயில்நிலையத்துக்கு சென்றதைப்பற்றி சொல்கிறேன். ஓட்டலில் இருந்து சிறிது தூரத்தில் டக்கேகஷி சுரங்கப்பாதை ரயில்நிலையம் உள்ளது. அங்கிருத்து மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை டோஷன் செல்லும் ரயிலில் ஏறி ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு குடன்ஷிடா ரயில்நிலையத்தில் இறங்க வேண்டும். பின் குடன்ஷிடா சரங்கப்பாதையில் பத்து நிமடங்களுக்கு ஒருமுறை வரும் ஷின்ஜிகு லைன் ரயிலில் ஏறவேண்டும்.

ஏழு நிமிட பயணத்திற்கு பிறகு ஷின்ஜிகு ஷான்ஷோம் ரயில் நிலயத்தில் இறங்கி சுரங்கப்பாதையில் ஷாப்பிங் வழியாக உட்புறம் நடந்தால் ஐந்து நிமிடங்களில்
ஷின்ஜிகு ரயில் நிலையத்தை அடையலாம். சரியாக சில இடங்களை அடையாளம் வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு வெளியேறும் இடங்களைப் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும். ஏனென்றால் தினந்தோறும் அந்த ரயில்நிலையத்தைப் பயன்படுத்தும் ஜப்பானியர்களே வழிதவறி குழம்பிவிடுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

நாங்கள் அன்று ஷின்ஜிகு ஹோயன் தேசியப் பூங்கா செல்ல வேண்டியிருந்ததால் ஷின்ஜிகு ரயில் நிலையத்தை ஒன்றரண்டு வெளியேறும் இடங்களை மட்டும் பார்த்து விட்டு வழிதவறி எங்காவது சென்று விடக்கூடாது என்பதற்காக வந்த வழியே அடையாளங்களை பார்த்தபடி ஷின்ஜிகு ஷான்ஷோம் நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஏழு நிமிட நடை தூரத்தில் ஷின்ஜிகு ஹோயன் தேசியப் பூங்கா எங்களை வரவேற்றது.
(தொடரும்…)
![]()