உலகம்

ஆஸ்திரேலியாவில் எல் நினோ தாக்கம்: சிட்னியில் வெப்ப அலை

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் சனிக்கிழமை வசந்த காலத்தின் தொடக்கத்திலேயே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து, தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள வலிமையான ‘எல் நினோ’ (El Nino) வானிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகச் சக்திவாய்ந்ததாக எதிர்பார்க்கப்படும் இந்த எல் நினோ காரணியால், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான வசந்த காலத்தில் தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையான வெப்பமும் வறட்சியான சூழலும் நிலவி வருகிறது.

சுமார் 56 லட்சம் மக்கள் வாழும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில், சனிக்கிழமை வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை (91.4 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டும் என நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பான வெப்பநிலையை விட சுமார் 13 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

வானிலை மையத் தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணியளவிலேயே சிட்னி விமான நிலையப் பகுதியில் வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது செப்டம்பர் மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 7 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாகும்.

“காலை வேளையில் வீசத் தொடங்கும் பலமான வடமேற்குச் சூறாவளிக் காற்றும், அதனுடன் இணைந்து நிலவும் வறட்சியான, வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்பமும் கிரேட்டர் சிட்னி பிராந்தியம் முழுவதும் தீ விபத்து அபாயத்தை அதிகரிக்கும்” என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, சிட்னியில் தீ விபத்து அபாயம் “மிகக் தீவிரமானது” (Extreme) என இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கை விடுத்துள்ள மாநிலத் தீயணைப்புத் துறை அதிகாரிகள், நகரம் முழுவதும் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை விதித்துள்ளனர்.

சுமார் 2.7 கோடி மக்கள் தொகை கொண்ட, இயல்பாகவே காட்டுத்தீ அபாயம் நிறைந்த ஆஸ்திரேலியாவில், பருவநிலை மாற்றம் காரணமாகக் கடுமையான வெப்ப அலையும் காட்டுத்தீ காலநிலையும் பெருகி வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல வீடுகள் சாம்பலாகின; ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பெரும் பரப்பளவிலான வனப்பகுதிகளும் தீக்கிரையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *