பலதும் பத்தும்

பிரான்ஸை உலுக்கிய வெப்ப அலை; 7,000 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் இந்த கோடைகாலத்தில் கொடூர வெப்ப அலை காரணமாக, ஜூலை மாத இறுதி வரை மட்டும் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரான்ஸ் கண்ட மிக மோசமான கோடைக்காலமாக இது பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸை உலுக்கிய வெப்ப அலை ; 7,000 பேர் பலி | Heatwave Rocks France 7 000 Dead Until July

இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலை

 

பிரெஞ்சு பொது சுகாதார அமைப்பின் (Santé publique France) பூர்வாங்க தரவுகளின்படி, ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையிலான இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலையின் போது மட்டும் சுமார் 5,764 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது வழக்கமான மரணங்களின் விகிதத்தை விட 36 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வீசிய இரண்டாவது கட்ட வெப்ப அலையில் மேலும் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.

இதுகுறித்துத் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட், “தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக வீசி வரும் கடுமையான வெப்ப அலையால் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. பெருநகரங்களில் தனியாக வாழ்ந்த முதியோர்கள் மற்றும் நோயாளிகளே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

மேலும், முழுமையான மற்றும் இறுதியான மரணப் புள்ளிவிவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் வெயில் கொளுத்தி வரும் சூழலில், பிரான்சில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் 2003-ஆம் ஆண்டு 15,000 பேர் பலியான கொடூர நிகழ்வுக்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச மரண விகிதமாகப் பார்க்கப்படுகிறது .

காட்டுத்தீ மற்றும் முன்னெப்போதும் இல்லாத வெப்பத்தால் நிலைகுலைந்துள்ள பிரான்ஸ் அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவசரநிலையைச் சமாளிக்கப் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *