பலதும் பத்தும்

டீ அதிகம் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?

டீ அதிகம் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன, பக்கவிளைவுகள் என்னென்ன, ஒருநாளைக்கு எத்தனை தேநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பன போன்ற விவரங்களை இங்கே தெரிஞ்சுக்கோங்க!

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது பலருக்கும் தினசரிப் பழக்கமாக இருக்கும். அதுபோல வேலைக்கு நடுவே சோர்வாக உணரும்போது கூட, தேநீர் குடிப்போம். ஆனால் இப்படி அதிகமாக தேநீர் அருந்துவது, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் கவனிக்கத்தக்கது. அவற்றில் முக்கியமான 3 பிரச்சனைகள் குறித்துதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

அந்தவகையில் அதிகப்படியான தேநீர் அல்லது காபி குடிப்பது, தூக்கத்தைப் பாதிக்கலாம். குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிகமாகத் தேநீர் அருந்தினால் தூங்க முடியாமல் போகலாம். தூக்கமின்மையானது, மறுநாள் சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

இரண்டாவதாக, சிலருக்கு அமிலத்தன்மை, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக, வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படலாம். அதேநேரம் தேநீரின் விளைவு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தேநீர் அருந்திய பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவோர், அதன் அளவைக் குறைப்பது நல்லது.

மூன்றாவதாக, தேநீரில் உள்ள டானின்கள் உணவிலிருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கக்கூடும். இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்தசோகை உள்ளவர்கள், உணவு உண்ட உடனேயே தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். உணவிற்கும் தேநீருக்கும் இடையில் சிறிது நேரம் விடுவது நன்மை தரும்.

மேலும், தேநீரில் அதிகப்படியான சர்க்கரை, கிரீம் அல்லது அதிக கலோரி கொண்ட பிற பொருட்களைச் சேர்ப்பது மொத்த கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கக்கூடும். எனவே, தேநீர் அருந்தும் போது சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது சிறந்தது.

தேநீர் பிரியர்கள் அதை முற்றிலுமாக கைவிட வேண்டியதில்லை. தேநீரை அளவோடு அருந்துவதும், சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்பதும் முக்கியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு போதுமான தினசரி உடல் செயல்பாடு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவையும் அவசியமானவை.

அளவோடு என்பது என்ன? ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப்புகளுக்கு மேல் (சுமார் 400 மில்லி கிராம் காஃபின்) அதிகமாக தேநீர் குடிக்கும்போது, அது உடலில் பல ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என வைத்தியர்களால் பெரிதும் பேசப்படும் கருத்தாக காணப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *