இலங்கை

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஆகியவை அவர் செய்த அனைத்து விடயங்களையும் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றாலும், குற்றம் செய்த நபர் தான் எவ்வளவு தூரம் தவறு செய்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சான்றுகளின் அடிப்படையில் குற்றங்களை வெளிக்கொணர்வதே புலனாய்வாளர்களின் பணியாகும். தான் செய்த குற்றங்களை அறிந்த ஒருவர் கைது செய்யப்படலாம் என்று அச்சப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

மக்கள் கூட்டத்தைக் கண்டு அரசு பயந்துவிட்டது என்றோ, அரசியல் பழிவாங்கல் காரணமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றோ சொல்வது தவறானது. தவறு செய்தவர்கள் சட்டத்திலிருந்து தப்பியோடாமல் அதை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மூன்று வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது.

ஒருவேளை உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறினால் அதற்கும் அரசு தயாராக உள்ளது.

சட்ட திருத்தங்களை மேற்கொண்டபோது சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சரத்துகளில் கைவைக்கப்படவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது என்றே நம்புகின்றோம்.

நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அரசு அதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயற்படும். – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *