பலதும் பத்தும்

கனடாவில் 56 பேர் முதுகின் மீது தாவி கின்னஸ் உலக சாதனை படைத்த நாய்

கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோன்’ என்ற பெண் நாய் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் இந்த நாயை வளர்த்து வருகிறார். நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சியில் அனுபவம் கொண்ட ஜெனிபர், ‘சார்டோன்’ நாயின் தனித்திறமையை அடையாளம் கண்டு, இந்த உலக சாதனைக்காக அதற்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 14ஆம் திகதி கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள ‘எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்’ பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.

இதற்காக 56 தன்னார்வலர்கள் மைதானத்தின் புல்வெளியில் வரிசையாக, ஒருவருக்கொருவர் இடைவெளியின்றி குனிந்து நின்றனர்.

கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, ஒரு நிமிடத்திற்குள் அனைத்து 56 பேரையும் நாய் கடந்து செல்ல வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நடுவர்கள் சிக்னல் வழங்கியதும் ‘சார்டோன்’ மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வரிசையாக குனிந்து நின்றிருந்த 56 பேரின் முதுகுகளின் மீது வேகமாக ஓடி, தாவிக் கடந்து வெறும் 16 விநாடிகளில் இலக்கை அடைந்தது.

இதனை நேரில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘சார்டோன்’ மிகவும் புத்திசாலித்தனமான நாய் எனத் தெரிவித்த அதன் பயிற்சியாளர் ஜெனிபர் பிரேசர், மனிதர்களுக்கு காயம் ஏற்படாத வகையிலும், அதே நேரத்தில் வேகத்தை குறைக்காமலும் ஓடுவதற்கு நாய்க்கு நுணுக்கமான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சாதனை தொடர்பான முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழையும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ‘சார்டோன்’ நாயின் சாகசத்தைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button