இலங்கை

யாழ். வலி வடக்கு காணி விடுவிப்பு இம்மாத இறுதியில் சாத்தியம்

யாழ். வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக  செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் செப்டம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம் போதை ஒழிப்பு போன்ற விடயங்கள் கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது.

 

நாட்டை குழப்பம் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில் செயற்பட்டுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாங்கள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது தோழர் அநுர மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக செயற்பட்டு வருகிறார்.

 

நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

 

இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.

 

அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.

 

இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல.

 

மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றுவோம்

என தெரிவித்தார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button