உலகம்

போரில் திருப்பம் – ஈரானுக்கு கைக்கொடுக்கும் ரஷ்யா, வலுவடையும் இராணுவ உறவு

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அளவுக்கு வேகமான, சக்திவாய்ந்த புதிய வகை குரூஸ் ஏவுகணையை உருவாக்குவதில் ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக உதவி வருவதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக பிரசூரித்துள்ளது.

ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள குறித்த செய்தியில், C430L என அறியப்படும் ஒரு ரகசிய திட்டம் நீண்டகாலமாக பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக உதவி வருவதாகவும்  இதற்காக ரஷ்யா  மிகவும் அனுபவம் வாய்ந்த ஏவுகணைப் பொறியாளர்களில் சிலரைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மொஸ்கோவிலிருந்து தெஹ்ரானுக்கு இதுவரை நடந்த மூலோபாய இராணுவத் தொழில்நுட்பங்களின் மிக முக்கியமான பரிமாற்றங்களில் ஒன்றாக இது காணப்படுவதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 2023-ல் தொடங்கி, ஈரானுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போதும் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் என்ன?

இந்தத் திட்டத்தின் மையத்தில் ராம்ஜெட் உந்துவிசை அமைப்பு உள்ளது. இது ஒரு வகை இயந்திரமாகும், இது ஒரு பயண ஏவுகணையை ஒலியின் வேகத்தை விடப் பல மடங்கு வேகத்தில் பறக்கச் செய்கிறது.

இந்த வகையான தொழில்நுட்பம் கப்பல்கள் அல்லது தரை இலக்குகளைத் தாக்க வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளுக்காகவே பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு மீயொலிவேகப் பயண ஏவுகணையின் நன்மை, அதன் அதிவேகத்தையும் குறைந்த உயரப் பயணத்தையும் இணைப்பதில் உள்ளது. இது, ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகள் அதைக் கண்டறிந்து இடைமறிக்க எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறது.

குறிப்பாக இந்த தொழில்நுட்பம் வளைகுடாப் பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது, அங்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் படைகளைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. அவற்றை துல்லியமாக தாக்க இந்த தொழில்நுட்பம் உதவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது வியூக ரீதியாக ஏன் முக்கியத்துவம் பெறுகிறது

ஈரான் மீது கவனம் செலுத்திய முன்னாள் சிஐஏ ஆய்வாளரும், தற்போது ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆய்வு மையத்தில் பணிபுரிபவருமான ஜிம் லாம்சன், இந்த வகையான அமைப்பு ஈரானுக்கு “தரமான ஒரு புதிய வியூக ஆயுதத்தை” வழங்கும் என்றும், அது அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கசிந்துள்ள ஆவணங்களின்படி, இந்த திட்டம் அல்லது இது தொடர்பான விவாதம் இந்த கோடைக்காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தற்போது அமெரிக்கா -ஈரான் போரில் இந்த ஏவுகணைகள் கப்பல்களை அழிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஆழமடையும் ரஷ்யா-ஈரான் இராணுவ உறவு

கசிந்துள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும்போது ஈரான், ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வருவதை புரிந்துக்கொள்ள முடிகிறது.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போரில் முக்கியப் பங்கு வகித்த ஷாஹெட் தாக்குதல் ட்ரோன்களை ஈரான் ரஷ்யாவுக்கு வழங்கியது இதற்கான முக்கிய சான்றாகும்.

மேலும் ரஷ்யா உள்நாட்டிலேயே ட்ரோன்களைத் தயாரிக்கத் தொடங்கவும் ஈரான் உதவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலின் போது, ​​செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் உதவி மற்றும் ஆயுத அமைப்புகளுக்கான பாகங்கள் உள்ளிட்ட ஆதரவை ஈரான் வழங்கியதன் மூலம், ரஷ்யா இந்த உதவிக்கு கைமாறு செய்யும் என மேற்கத்தேய அதிகாரிகள் குறிப்பிட்டிருந்ததும் இங்கு நினைவுக்கூறத்தக்கது.

மேலும் குறித்த  அறிக்கையின்படி, C430L திட்டத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், அது போர்க்கள ஆதரவைத் தாண்டியும் செல்கிறது. ஈரான் தனக்கென ஒரு மேம்பட்ட மூலோபாய ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ரஷ்யா நேரடியாக வழங்குவதாக கூறப்படுகிறது.

ரஷ்யா தரப்பில் ஈரானுக்கு உதவுவது யார்? அல்லது ஈரானுக்கு ரஷ்யா எப்படி உதவுகிறது?

ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் Rosoboronexport இந்த திட்டத்திற்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவும் ஈரானும் பகிரங்கமாகக் கூறியவை

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை விட, கசிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம்​​”இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களுக்குத் தேவையான உதவியை வழங்க மொஸ்கோ முயற்சிப்பதாக கூறினார்.

அந்த உதவியில் என்னென்ன அடங்கும் என்பது குறித்த மேலதிக விவரங்களை அவர் வௌியிடவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button