இலங்கை

ஜே.வி.பி.தூக்கிய ஆயுதங்களே நாட்டின் அழிவுக்குக் காரணம்

இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம் என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள், வழக்குகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாட்டில் வலுவான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இயங்க முடியாத சூழல் நிலவுகின்றது. அரசியல்வாதிகளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் பயத்தில் வெளியே வர முடியாத நிலை காணப்படுகின்றது.

இருப்பினும் அரசின் இந்த அழுத்தங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மிக விரைவில் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபடுவர். 1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது பெருமைமிக்க 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், 2026 செப்டெம்பர் 2ஆம் திகதி கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.

கடந்த 76 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை எனத் தற்போதைய அரசு கூறுவது முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுகள் எட்டிய வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை இந்த மாநாட்டின் மூலம் மக்களிடம் வெளிப்படுத்தவுள்ளோம்.

மேலும், தற்போதைய அரசு பெருமையுடன் பேசும் கனிம எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சித் திட்டங்கள், காஸ் கண்டறிதல் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட் சிட்டி வரையிலான அதிவேகப் போக்குவரத்துப் பாதை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதிப் கட்டங்களே தவிர, இந்த அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்டவை அல்ல.

அரசால் முன்னெடுக்கப்படும் 22ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் ஆபத்தானவை. இவை ஒரு சர்வாதிகார நிர்வாகத்துக்குத் தேவையான சூழலை உருவாக்கவே செய்யப்படுகின்றன. இவை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது ஊடகங்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மிகவும் ஆபத்தானது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நிதி அமைச்சு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் குறித்துப் பேசும் ஆட்சியாளர்கள், முதலில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும். அத்துடன், முன்னாள் விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கே.பி. (குமரன் பத்மநாதன்) வசம் கப்பல்களும் பெருமளவு பணமும் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

நாட்டின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி நடத்திய ஆயுதக் கலவரங்களால் பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம். நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button