இலங்கை

கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம்: திருமலை மேல் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை?

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம்   இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் இருந்த நிலையில், அங்கு பௌத்த தூபி இருப்பதாகக் கூறி தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தது.

இது தொடர்பான வழக்கில் 2019ஆம் ஆண்டில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, கோயில் வேறொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், பழைய இடத்தில் உள்ள தூபியை ‘பேணிப் பாதுகாக்க மட்டுமே’ தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிமையுண்டு எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற இணக்கப்பாட்டிற்கு முரணாகத் தொல்பொருள் திணைக்களம் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததை அடுத்து, காணியின் உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

வழக்குத் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தொல்லியல் சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழும், நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கத்தின்படியும் அந்த இடத்தில் ‘பாதுகாத்தல்’ மட்டுமே செய்யப்படலாமே தவிர, புனர்நிர்மாணம் அல்லது புதிய கட்டுமானங்கள் எதையும் செய்ய முடியாது என்று வாதாடினார்.

தொல்பொருள் திணைக்களம் அங்கு என்ன வகையான நிர்மாணங்களை மேற்கொள்கின்றது என்பது குறித்த எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிக்க அரச தரப்பு சட்டத்தரணி அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினம் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button