பலதும் பத்தும்

உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்

புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்டனின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அறிவித்துள்ளனர்.

அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் (Bryan Seaver) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத் துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி (Grammy) விருதுகளை வென்றுள்ளதுடன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

அவர் “Jolene”, “I Will Always Love You” மற்றும் “9 to 5” போன்ற உலகப் புகழ்பெற்ற பல பாடல்களை உருவாக்கிய பாடலாசிரியரும் ஆவார்.

டோலி பார்ட்டன் தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டதுடன், பாடல் எழுதுவதை தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வழியாகவும், தனக்கான ஒரு “சிகிச்சையாகவும்” கருதியதாகப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

இசைக்கு மேலாக நடிப்பு, வணிகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் அவர் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.

அவர் தொடங்கிய Imagination Library என்ற திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை விநியோகித்தது உட்பட பல சமூக நலப்பணிகளில் அவர் பங்காற்றியுள்ளார்.

டோலி பார்ட்டனின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், அவர் குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் “கன்ட்ரி இசையின் ராணி” என்று அழைக்கப்படும் டோலி பார்ட்டனின் மறைவு இசைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button