இலங்கை

நாங்கள் தாமதித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சாட்சியங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன;  யாழ் மாநாட்டுக்கு அனைவரும் அணி திரள வேண்டும்

எதிர்வரும்- 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டுக்குத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படவிருக்கின்ற மாநாடு காலத்தின் தேவை. அந்த மாநாட்டில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கட்டாய கடமை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தங்களுக்காகவோ, தங்கள் உறவுகளுக்காகவோ காணாமல் ஆக்கப்படவில்லை. தமிழினத்தைக் கட்டமைத்த ரீதியில் இனப்படுகொலை செய்ய வேண்டுமென்ற ரீதியில் தான் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, இதனை வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் மாநாடாகக் கருதாமல் ஈழத்தமிழர்களின் மாநாடாகக் கருதி அலைகடலெனத் திரண்டு பங்குபற்றி ஆதரவு வழங்க வேண்டியது தமிழர்களின் கடமை.

எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை மேலும் விஸ்வரூபமாக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் தாமதித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சாட்சிகள் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. சாட்சியாளர்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் நீதி காணும் பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டுமாகயிருந்தால் இனியும் நாம் காலத்தை வீணடிக்காது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் மாநாட்டுடன் சேர்த்து எங்கள் போராட்டங்களை வீச்சாக்க வேண்டும்.

வடகிழக்கெங்கும் தமிழ்மக்களும், சிவில் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், நீதிக்காகப் போராடுபவர்களும், ஊடகங்களும் சர்வதேச விசாரணையை முதன்மைப்படுத்தி எங்கள் குரல்களை உயர்த்தி ஒலிக்கச் செய்யாவிடில் நீதி என்பது கானல் நீராகக் கூடிய அபாயம் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button