பலதும் பத்தும்

இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.

கடந்த 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது.

இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.

மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள ‘ஷடானி தர்பார்’ சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, “இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.

எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர்.

நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவிக்கையில்,

“நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button