உலகம்

பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் தெரிவு

பங்களாதேஷின் 23 ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் அலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

அதன்பின் இந்த ஆண்டு பெப்ரவரி 12 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சி பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

புதிய ஆட்சியின் பிரதமராக தாரிக் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.

2023இல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் இருந்தபோது அந்த நாட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷஹாபுதீன் (76 வயது) தனக்கு கடுமையான உடல்நலக்குறைவு இருப்பதாக அறிவித்து கடந்த ஜூலை 24 அன்று இராஜினாமா செய்தார்.

ஆனால் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான அவர், கடும் அரசியல் அழுத்தத்திற்கு மத்தியிலேயே இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் பங்களாதேஷ் அரசியலமைப்புச் சட்டப்படி 90 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 255க்கு 88 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளும் பிஎன்பி கட்சியின் சிரேஷ்ட தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் அலம்கீர் நாட்டின் 23வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்ட ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளரும், LDP கட்சியின் தலைவருமான ஓய்வுபெற்ற கர்னல் ஒலி அகமது (84) தோல்வியை தழுவினார்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றபோது அரசியலில் பிரவேசித்த அலம்கீர், பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை எதிர்த்து 1969இல் நடந்த மாணவர் எழுச்சியில் முக்கிய தலைவராகச் செயல்பட்டார்.

பின்னர் 1990களின் தொடக்கத்தில் பிஎன்பி கட்சியில் இணைந்தார்.

ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய எதிரணி தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். அக்காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்.

அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001 முதல் 2006 வரை மறைந்த பிஎன்பி தலைவர் கலீதா ஜியா ஆட்சியில் விவசாயம், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button