உலகம்

அரசியல் நெருக்கடியில் நியூசிலாந்து பிரதமர்; ஆட்சி பறிபோகும் அபாயம்

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார்.

“பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் எனது தலைமைத்துவம் குறித்து அதிக ஊகங்கள் எழுந்துள்ளமை தெளிவாகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய பிளவுகள் பெரும் கவனச்சிதறலை ஏற்படுத்தும். எனவே, பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் புதன்கிழமை காலை 9:30 மணிக்கு வெலிங்டனில் அவசரக் கூட்டம் கூடுகிறது” என லக்ஸன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் பேசுவதற்காகத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி வழியில் கலந்துரையாடி வருவதாக ‘நியூசிலாந்து ஹெரால்டு’ (New Zealand Herald) செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக பிரதமர் லக்ஸன் மேற்கொண்ட சில பகிரங்கத் தவறான நகர்வுகளே இந்த நெருக்கடிக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளன.

கடந்த வாரம், கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல் நாட்டின் தேர்தல் முறைமை குறித்த வாக்கெடுப்பிற்குத் தான் தயாராக இருப்பதாக நேரலை வானொலி நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், வணிகர்கள் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல் “முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்” என அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.

2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சியமைத்த லக்ஸன் தலைமையிலான அரசாங்கத்திற்கு, நாட்டின் மெதுவான பொருளாதார மீட்சி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருகிறது.

ஜூன் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், பணவீக்கம் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி (Labour Party) சற்று முன்னிலையில் உள்ள நிலையில், கிறிஸ் பிஷப் (Chris Bishop) மற்றும் எரிகா ஸ்டான்ஃபோர்ட் (Erica Stanford) ஆகியோர் லக்ஸனுக்கு அடுத்தபடியாகப் புதிய பிரதமராகக் களமிறக்கப்படலாம் என நியூசிலாந்து ஊடகங்கள் கணித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button