உலகம்

அமெரிக்க குடியுரிமைக்காக பிரசவ சுற்றுலா? டிரம்ப் கையெழுத்திட்ட புதிய கட்டுப்பாடுகள்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை வழங்கப்படும் நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ‘பிரசவ சுற்றுலா’வை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின் குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்க மண்ணில் பிறக்கும் பெரும்பாலானோருக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதனைப் பயன்படுத்தி சில வெளிநாட்டவர்கள் சுற்றுலா அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்கா சென்று குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நடைமுறையே ‘பிரசவ சுற்றுலா’ என அழைக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை கட்டுப்படுத்தும் நோக்கில் டிரம்ப் ஏற்கனவே நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். எனினும், ஜூன் 30ஆம் திகதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது முந்தைய முயற்சிக்கு எதிராகத் தீர்ப்பளித்ததுடன், 14ஆவது திருத்தத்தின் கீழ் பிறப்புரிமைக் குடியுரிமைக்கான நீண்டகால சட்ட விளக்கத்தை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், டிரம்ப் கடந்த வியாழக்கிழமை மீண்டும் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அவற்றில் ஒன்று, குடியுரிமையைப் பெறுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெற்றோரின் குழந்தைகளின் குடியுரிமையை அங்கீகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மற்றொன்று, குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா வருவதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது.

மேலும், வெளிநாட்டு அரசாங்க ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட வகையில் ‘எதிரி வெளிநாட்டவர்கள்’ என வகைப்படுத்தப்படுபவர்களின் குழந்தைகளுக்கான பிறப்புரிமைக் குடியுரிமை தொடர்பிலும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த இந்த உத்தரவுகள் முயற்சிக்கின்றன.

எனினும், இந்த புதிய நிர்வாக உத்தரவுகளும் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரத்தின் வரம்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button