இலங்கை

இந்தியாவினால் இலங்கை மக்களின் ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற முடியாதுள்ளது – வசந்த முதலிகே சாடல்!

இலங்கையின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால், இலங்கை மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டினார்.

உயிரளவியல் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதனை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் மக்கள் போராட்ட இயக்கத்தின் குழு  இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு சென்றிருந்நது.

இந்நிலையில் குறித்த கடிதத்தை இந்திய உயர்ஸ்தானிகர் ஏற்க மறுத்ததாக தெரிவித்து மேற்கண்டவாறு வசந்த முதலிகே குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்களின் கண்விழிப் படலம், கைரேகைகள், மரபணு, முக அமைப்பு மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட மிக முக்கிய உயிரியல் தரவுகளைச் சேகரித்து டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிக்கும் திட்டத்துக்காக இந்திய நிறுவனங்களைத் தெரிவுசெய்யும் வகையில், கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இலங்கையில் தேசிய அடையாளப் பத்திரத் திணைக்களம் இயங்கிவரும் பின்னணியிலும், அதற்குப் பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலிலும், அதனைத் தடுத்து நிறுத்திவிட்டு இத்திட்டத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையிலேயே நாம் நேற்றைய தினம் இந்த மகஜரைக் கையளிக்க வந்தோம். இருப்பினும், இந்த மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்த உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இது குறித்து இலங்கை அரசாங்கத்துடனும் வெளியுறவு அமைச்சருடனும் பேசுமாறு கூறி எம்மைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை மக்களின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், பொருளாதார மண்டலத்துக்கான நிலங்கள் மற்றும் தீவுகளில் உள்ள கனிம வளங்கள் என அனைத்தையும் கைப்பற்றத் துடிக்கும் இந்தியவால், இலங்கை மக்கள் கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல்போயுள்ளது.

டிஜிட்டல்மயமாக்கல் என்ற பெயரில் இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவுகளைத் திரட்டுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் அடையாள அட்டை முறைமைக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால், உலகளவில் தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உயிரியல் தரவுகள் இன்றி டிஜிட்டல் அடையாள அட்டைகள் உருவாக்கப்படும் நடைமுறைகள் காணப்படுகின்றன. உயிரியல் தரவுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் முறைமையை உலகின் பல நாடுகள் நிராகரித்துள்ளன. கடுமையான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ள இஸ்ரேல் நாடு கூட உயிரியல் தரவுகளைச் சேகரிப்பது பொருத்தமானதல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது.

முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு தனிநபருக்கும் தனது உடல் மற்றும் சுதந்திரம் சார்ந்த உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால், தனிநபரின் விருப்பத்துக்கு மாறாக அவர்களின் உயிரியல் தரவுகளைப் பலவந்தமாகத் திரட்டுவது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைவதுடன், சமூகத்தை மீண்டும் முடியாட்சி மற்றும் அடிமைத்தனத்தை நோக்கியே இட்டுச் செல்லும். மேலும், இருபது பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்துக்கு இந்தியா பத்து பில்லியன் ரூபாவையும், இலங்கை பத்து பில்லியன் ரூபாவையும் வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டாலும், இத்தொகையில் இத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது என இந்திய நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன் காரணமாக இலங்கை மக்களின் வரிப்பணமே மேலதிகமாக விரையமாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

மறுபுறம், அரசாங்கத்தின் திறைசேரித் தரவுகள் அண்மையில் கணினி ஊடுருவல்களால் காணாமல்போயிருந்த நிலையில், எவ்விதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி மக்களின் உயிரியல் தரவுகளைச் சேகரிக்க முற்படுவது பெரும் ஆபத்தானது. இத்தரவுகள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது கணினித் தகவல் திருடர்களின் கைகளுக்குச் சென்றாலோ தனிநபர்களின் பாதுகாப்பும் உரிமைகளும் முற்றிலும் இல்லாமல்போய்விடும்.

இந்தியாவை பெரிய அண்ணனாகவும், இலங்கை அரசாங்கத்தை தம்பியாகவும் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள், எதிர்காலத்தில் நாட்டை முழுமையான கண்காணிப்பு அரசாங்கமாக மாற்றுவதற்கே வழிவகுக்கும். எனவே, மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இத்திட்டத்துக்கு எதிராக நாம் எமது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button