இலங்கை

கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள் 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமாக இயங்கிய ஒரு பிரிவு தொடர்பில் எவ்வித நீதி நடவடிக்கைகளும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் -தாக்குதல்- பயமுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணு அதிகாரிகள் இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் சுதந்திரமாக நாட்டில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு பிரிவு இயங்குவதை அரசாங்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

புலனாய்வு பிரிவில் இயங்கிய இரகசிய குழு

இந்த குழுவுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது யார் என்பது மட்டுமல்ல அந்த உத்தரவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்கள் தொடர்ந்தும் தவிர்த்தது ஏன் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

எந்தவொரு மேற்பார்வைக் குழுவிற்கும் பொறுப்புக்கூறக் கடமைப்படாத, பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் ஒரு பிரிவாக இரகசியமாக இயங்கியது. இந்தப் பிரிவின் நேரடிப் தளபதியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரச புலனாய்வுச் சேவையுடன் (SIS) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகளில், செயற்பாட்டுத் திறமையை விட இரகசியத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்தப் பிரிவு கொஹுவல இராணுவ முகாமில் நிறுவப்பட்டிருந்தது. இந்த உறுப்பினர்கள் சாதாரண இராணுவத்தினரிடமிருந்து தனித்து வாழ்ந்ததுடன், தனி உணவு மற்றும் வசதிகளைப் பெற்று, சாதாரண இராணுவ ஒழுக்கம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.

2009 ஆண்டளவில் போர் இறுதிப் கட்டத்தை எட்டியிருந்ததால், இந்தப் பிரிவு யுத்த களத்திற்காகக் கட்டியெழுப்பப்படவில்லை மாறாக ஏனைய உட்புற அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.

கண்ணுக்குத் தெரியாமல் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம்….. ஒரு சாதாரண குற்றக் கும்பலிலிருந்து இந்தப் பிரிவை வேறுபடுத்துவது, ஆயுதமேந்திய உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி கொழும்பு நகரத்திற்குள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிக்கலான ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.

கண்காணிப்பு கெமராக்களில் சிக்காமல் இருக்க போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய வெள்ளை நிற வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள்

பல ஆண்டுகளாகச் செயற்பட்ட இந்தப் பிரிவின் தாக்குதல்களில் ஒரே மாதிரியான முறைமை காணப்பட்டது. இரவு வேளையில் வெள்ளை வேன்களில் வருதல், T-56 துப்பாக்கிகளைக் காட்டி ஊடகர்களை அச்சுறுத்தல் மற்றும் இறுதியில் பெற்றோல் ஊற்றி ஊடக நிறுவனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தல்.

2009 ஜனவரி 6 அதிகாலை 2:30 மணிக்கு தெபானமவில் அமைந்துள்ள சிரச TV ஒளிபரப்பு மையத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பு சம்பவம்.

உளவுத்துறையின் உட்புற தகவல்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கூற்றுகளின்படி, இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரச நிதியில் இயங்கிய ஒரு இரகசியப் பிரிவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2010 ஜூலை 29 சியத TV கங்காராமய 12 பேரடங்கிய கும்பல் வந்து, ஊழியர்களுக்குத் துப்பாக்கிகளைக் காட்டி முழங்காலிடச் செய்து, ஒளிபரப்பு உபகரணங்களுக்குப் பெற்றோல் இட்டு நிறுவனத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.

2011 ஜனவரி 11 லங்கா ஈ நியூஸ் மாலபே 6 பேரடங்கிய கும்பல் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவின் வளாகத்திற்குள் நுழைந்து, கணினி அமைப்புகள் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தைத் தீயிட்டு அழித்தது.

படுகொலைகள், கடத்தல்கள்
லசந்த விக்கிரமதுங்க: ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் படுகொலை. பிரகீத் எக்னலிகொட கடத்தல். MBC/MTV செய்தி முகாமையாளர் செவோன் டேனியல் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிரிவுகளின் தலையீட்டின் பேரில் தப்பினார்.

லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 5 மாத தீவிர கண்காணிப்புக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்திற்குத் தப்பிச் சென்றார். இந்த குழுவினர் சாதாரண இராணுவச் சம்பளத்திற்கு மேலதிகமாக பல சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் இருளில் நடந்த ஏதேச்சையான சம்பவங்கள் அல்ல, அரச நிதியில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், குற்றப் புலனாய்வுத் துறை (CID), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

ஆனால் கேள்வி என்னவென்றால், இலங்கையின் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்றாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துமா என்பதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button