இலங்கை

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!

செம்மணி– சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் , செம்மணி பகுதியில் நடைபெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதாததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.

பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்கள் வாசித்தார்.

அறிக்கையில், 2026ஆம் ஆண்டு ஆடி மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சுயாதீன டி.என்.ஏ. பரிசோதனை, குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து, சான்றுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையின் பிரசன்னம் அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாண மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button