பலதும் பத்தும்

கழுத்துல கருப்பா இருக்கா?

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலர் தங்களின் கழுத்துப் பகுதிக்குக் கொடுப்பதில்லை. இதன் காரணமாகக் கழுத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதியில் வறட்சி மற்றும் அடர் கருமை நிறம் ஏற்பட்டு, அது ஒட்டுமொத்த அழகையும் பாதிக்கும் ஒரு குறையாக மாறிவிடுகிறது.

வெயிலின் தாக்கம், முறையான பராமரிப்பின்மை மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி ஆகியவற்றால் ஏற்படும் இந்தக் கருமையைப் போக்க, வீட்டிலுள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் தீர்வு காணலாம்.

எலுமிச்சம்பழச் சாற்றில் இயற்கையான ப்ளீச்சிங் குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து, பஞ்சினால் கழுத்தைச் சுற்றித் தடவ வேண்டும்.

20 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கருமையைப் படிப்படியாகக் குறைக்கும்.

உருளைக்கிழங்கில் உள்ள கேட்டகோலேஸ் என்ற என்சைம் தோலின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றைப் பிழிந்து, கழுத்தில் கருமையாக உள்ள இடங்களில் தடவ வேண்டும்.

15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின்னர் சாதாரண நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலை மென்மையாக்கவும், கருமையைப் போக்கவும் வல்லது. இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போலச் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டைக் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது கழுத்துப் பகுதிக்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்து பொலிவாக்கும்.

ஒருவேளை முறையான பராமரிப்பு மற்றும் அழகு குறிப்புகளைப் பின்பற்றிய பிறகும் கழுத்தின் கருமை குறையவில்லை என்றாலோ, அல்லது அந்த இடத்துத் தோல் மிகவும் தடிமனாக மாறினாலோ, அது வெறும் வெளிப்புற அழுக்காக இருக்காது.

மருத்துவ ரீதியாக இது ‘அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்’ எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு அல்லது இன்சுலின் எதிர்ப்பு போன்ற உட்புற உடல்நலப் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

எனவே, நீண்ட நாட்களாகக் கழுத்தில் கருமை நீடித்தால், கண்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஒருமுறை தகுதியான பொது வைத்தியரை அல்லது தோ​ல் வைத்தியரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button