இலங்கை

சட்டத்திற்கு முரணாக நீக்கப்பட்ட உப தவிசாளர் பதவி வேறு ஒருவரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமா?;  சகல கட்சிகளும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்

எதேச்சாதிகாரமாக, ஜனநாயகத்திற்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக நீக்கப்பட்ட கிஷோரினுடைய உப தவிசாளர் பதவி வேறு ஒருவரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமா என்பதனைச் சாவகச்சேரி நகரசபையிலே அங்கத்துவம் வகிக்கக்கூடிய தமிழ் தேசியக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும் ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரசபையினுடைய உப தவிசாளர் பதவிக்கான தெரிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பிற்போட எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சட்டத்தரணி என்பதற்கு அப்பால், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள், தமிழ் மக்களுடைய பொது நிறுவனங்களிலே ஜனநாயகம் மேலோங்க வேண்டும் என விரும்புகின்ற ஒருவன் என்ற அடிப்படையில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இதை கூறுகிறேன்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து கிஷோர் நீக்கப்பட்டமை ஜனநாயக விரோதமானது என்று பொதுவாகப் பரவலாக அனைவரும் முன்வைத்திருக்கக்கூடிய கருத்து. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட வெளிப்படையாக அதனைச் சொல்லியிருக்கின்றார்.

இந்தக் கட்டத்திலே சாவகச்சேரி நகரசபையிலே அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகள், எமது உள்ளூராட்சி சபைகள் ஜனநாயக ரீதியாகச் செயற்படுவதாக இருந்தால், குறித்த தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான கூட்ட நடப்பெண்ணை வழங்க வேண்டுமா?

எதேச்சாதிகாரமாக, ஜனநாயகத்திற்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக நீக்கப்பட்ட கிஷோரினுடைய உப தவிசாளர் பதவி வேறு ஒருவரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமா என்பதனைச் சாவகச்சேரி நகரசபையிலே அங்கத்துவம் வகிக்கக்கூடிய தமிழ் தேசியக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும் ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் உள்ளூராட்சி சபைகளுடைய உள்ளார்ந்த ஜனநாயகத் தன்மையைக் காப்பாற்றுவதுதான் நோக்கமாக இருந்தால், அந்தத் தெரிவு தொடர்பான முடிவுகள் அதனைச் சொல்லும். கிஷோரினுடைய பதவி அன்றைய தினம் வேறு ஒருவரை வைத்து நிரப்பப்படுமாயின், பதவிகள் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாடு உறுதி செய்யப்படும். அதற்கு மாறாக ஒரு செய்தியை இந்தக் கட்சிகள் சொல்லுமா என்பதனைப் பல்வேறு தரப்புகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. என்ன இன்று நடக்கும் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கிஷோரினுடைய உறுப்புரிமையில் இன்னும் அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படவில்லை. அந்த உறுப்புரிமையை நியமிக்காமல் இந்தத் தேர்தல் நடாத்தப்படுவது சரியா என்ற கேள்வியும் எழுகின்றது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button