பலதும் பத்தும்

நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

இந்தியாவில் மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை வைத்தியர்கள் அகற்றி, அவரை காப்பாற்றினர்.

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார்.

அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பல வைத்தியசாலைக்கு சென்றும், பிளாஸ்டிக் பொருள் என்பதால் சாதாரண எக்ஸ்-ரே பரிசோதனையில் அது சரியாகத் தெரியவில்லை. இதனால் வைத்தியர்கள் அவருக்கு காசநோய் மற்றும் ஆஸ்துமா இருப்பதாகக் கூறி, கடந்த 7 ஆண்டுகளாக அதற்கான மருந்துகளையும், இன்ஹேலர்களையும் வழங்கி வந்துள்ளனர்.

சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, அவர் மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் சிறுமிக்கு அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் இடது பகுதி மூச்சுக்குழாயின் ஆழத்தில் பேனா மூடி சிக்கியிருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீண்ட வருடங்களாக பேனா மூடி நுரையீரலில் இருந்ததால், சிறுமியின் இடது நுரையீரலின் கீழ் பகுதி முற்றிலும் சீழ் பிடித்து, சுருங்கி, கடுமையாகச் சேதமடைந்திருந்தது. இதையடுத்து, வைத்திய குழுவினர் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அந்த பேனா மூடியையும், அதோடு சேர்த்து முற்றிலும் சேதமடைந்த நுரையீரலின் ஒரு பகுதியையும் வெற்றிகரமாக அகற்றினர்.

தற்போது சிறுமி மைஷா ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, குணமடைந்து நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்குத் தொடர் இருமல் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும், உடனடியாக முறையான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button