அநுர வைக்கும் வெளிநாட்டு பொறிக்குள் சிக்கப் போகும் ராஜபக்சர்கள்

வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு தொடர்புடைய நபர்களின் தகவல்களை பெறுவதற்கு கூட்டு சிறப்புப் பொலிஸ் குழு ஒன்றை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்பஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.
2 மில்லியன் அமெரிக்க டொலர்
இதன் போது, ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக தகவல்கள் வெளியானது.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எயார்பஸ் இலஞ்சப் பரிவர்த்தனையின் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணக்கின் உரிமையாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாட்சியங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இலஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்றங்களால் பிடியாணை
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சமீந்திர ராஜபக்ச ஆகிய சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்துடன், அவர்களுக்கு தற்போது கொழும் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புரூணை நாட்டில் போலி நிறுவனம் ஒன்றை நிறுவி, புகழ்பெற்ற ஐரோப்பிய விமான நிறுவனத்திடம் இருந்து 1,454,645.54 யூரோக்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![]()