கட்டுரைகள்

பாரதியார் உவமைகளில் பெரியது… கட்டுரைத் தொடர் – 10… அண்டனூர் சுரா 

அண்டனூர் சுரா

பாரதியார் தன் படைப்புகளில் எவ்வளவோ உவமைகள் பயன்படுத்தியிருக்கிறார். அவரது உவமைகளில் நீண்ட உவமை ‘ஞான ரதம்’ எனும் படைப்பில்  பயன்படுத்தியிருக்கிறார். உவமை என்பதே கற்பனைதான்.  ஞான ரதம் கற்பனையான படைப்பு என்பதால் அந்த உவமை இந்தப் படைப்பில் இயல்பாக அமைந்திருக்கிறது.

ஞான ரதம், கனவு, சின்ன சங்கரன் கதை இம்மூன்றும் ஒரே காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள். அதாவது 1910 முதல் 1913 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இயற்றப்பட்டவை. பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. மேலும் குடும்பம், துணைவியாரைப் பிரிந்து வாழ்ந்தார். அதில் ஞான ரதம் என்பது பாரதியின் பெருந்துளி வாழ்க்கை எனலாம். இந்நூலின் முகவுரையில் இந்நூலை நானாக எழுதவில்லை. எல்லா நடத்தும் பரமாத்மா ஞான தீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞான ரதத்தில்  ஏற்றினான் என்கிறார். மேலும் அவ்வப்போது பாரதிக்கு உதவிய நண்பர் மஹேசகுமார சர்மாவுக்கு நன்றியும் மதிப்பும் தெரிவிக்கிறார்.

ஞான ரதம் கதை இதுதான்: பின் மாலைப்பொழுதில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் ஓர் வீட்டு மேடையின்மீது விரிக்கப்பட்டுள்ள மஞ்சத்தில் படுத்துத் தூங்குகிறார். அவரது கனவில் ஞான ரதம் வருகிறது. அதில் ஏறி பயணம் செய்கிறார். அந்த ரதம் உபசாந்தி லோகம், கந்தர்வ லோகம், ஸத்யலோகம்,  தர்மலோகம் எனும் நான்கு லோகங்களுக்குச் செல்கிறது. அங்கு மண்ணுலகில் இல்லாத பல காட்சிகளைக் காண்கிறார். பிறகு விழிக்கையில் அவர் திருவல்லிக்கேணியில் மெத்தையிலிருந்து கீழே விழுந்து கிடப்பது தெரியவருகிறது என்பதுடன் ஞானரதம் முதல் பாகம் முடிகிறது.

ஞான ரதத்தில் முக்கியமான லோகமாக கந்தர்வ லோகத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அங்கு இவருக்கு ஒரு தோழி கிடைக்கிறாள். அவளது பெயர் பர்வத குமாரி. அவள் பாரதிக்குக் கந்தர்வ லோகத்தைச் சுற்றி காட்டுகிறாள். பந்தாட்டக் களம் அதிலொரு இடம். ஓர் மேடையின்மீது கந்தர்வக் குழந்தைகள்  பூப்பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். ரோஜாதான் பந்து. ரஸிகை, கரீடாரமன் எனும் இருவர். கரீடாரமன் ரஸிகையிடம் சொல்கிறான், ” இனி நான் உன்னோடு விளையாட வரப்போவதில்லை.”

” ஏன்?” எனக் கேட்கிறாள் ரஸிகை.

” நீ பந்தை மட்டையைப் பார்த்து வீசாமல் என் முகத்தைப் பார்த்து வீசுகிறாய்” என்கிறான். இதைக் கேட்டு எல்லாரும் சிரிக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒருவன் தனியே அமர்ந்திருக்கிறான்.  அவனைக் காட்டி இந்தச் சிறுவன் யாரென்று கேட்கிறார் பாரதி. அதற்கு பர்வத குமாரி, ” இவன் எனது தம்பி. பெயர் சித்தரஞ்ஜனன். இவன் குழந்தையாக இருந்தபோது எங்கள் குலதெய்வம் காமதேவனுடைய அருள் பெற்றவனானான். இதனால் இவன் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல் கவிதைகள் புனைவதில் விருப்பம் கொண்டிருக்கிறான். இப்பொழுதுகூட அவன் கவிதைதான் புனைந்துகொண்டிருக்கிறான்.  வாருங்கள் கூப்பிட்டு கேட்போம், எனக் கேட்கிறார்கள்.

சித்தரஞ்ஜனன் மெல்ல தயங்கி பிறகு மனதிற்குள் அவன் எழுதிய கவிதையை சொல்கிறான்.

“இடியேறு சார்பிலுற உடல்வெந்தோன்

ஒன்றுரையா திருப்ப, ஆவி

முடியேறி மோதியதென் றருள்முகிலைக்

கடுஞ்சொற்கள்  மொழிவான் போலக்

கடியேறு மலர்ப்பந்து மோதியதென்

றினியாளைக் காய்கின்றானால்

வடியேறு வேலெனவெய் விழியேறி

யென்னாவி வருந்தல் காணான்.”

இதன் பொருள் :

“மேகத்திலிருந்து இடி இறங்கி ஒருவன் பக்கத்தில் விழுந்து வெந்து போனவன் ஒன்றும் சொல்லாது வெறுமென இருக்க, ஆலங்கட்டி தலையிலே விழப்பெற்ற மற்றொருவன் மேகத்தின்மீது சினங்கொண்டு கடும் வார்த்தைகள் பேசியதைப் போல, வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைக் கொண்டு தன்மீது எறிந்துவிட்டாளென்று ரஸிகையை கோபித்துக்கொள்கிறான் இந்த கிரீடாரமன். அவளோ வடிவேறிய வேல்களை எறிவதைப் போல அவளது விழிகளை என்மீது எறிந்துகொண்டிருக்கிறாள், அதை அவன் காண்கிறானில்லை.”

இப்பாடலில் பயன்படுத்தியுள்ள “இடியேறு சார்பிலுற உடல்வெந்தோன் ஒன்றுரையா திருப்ப, ஆவி  முடியேறி மோதியதென் றருள்முகிலைக்  கடுஞ்சொற்கள்  மொழிவான் போல” என்கிற உவமை பாரதியார் பயன்படுத்திய உவமைகளில் நீண்டதும் அழகானதுமாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button